சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற த.வெ.க பொதுக்கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் வி.எஸ். பாபு, தனது பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர் ஒருவரைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அந்தப் பணியாளர் குப்பைகளைச் சேகரிக்க வரும்போது முறையாக விசிலடிப்பதில்லை என்றும், தான் அவரை அழைத்து, “நீ விசிலடிக்காவிட்டால் உன்னை உதைப்பேன்” என்று மிரட்டியதாகவும் மேடையிலேயே தெரிவித்தார்.
தனது மிரட்டலுக்குப் பயந்து அந்தப் பணியாளர் உடனடியாக விசிலடிக்கத் தொடங்கியதாக அவர் பெருமையுடன் கூறியது, கூட்டத்தில் இருந்தவர்களிடையே மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடித்தட்டு மக்களுக்காகப் போராடப் போவதாகக் கூறும் ஒரு கட்சியின் முக்கிய நிர்வாகி, தூய்மைப் பணியாளரை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது கட்சிக்குத் தேவையற்ற நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
