2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி வியூகத்தை வகுக்கும் வகையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று (பிப். 22) தொடங்கியுள்ளது. முதலாவதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியுடன் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று இரவு காங்கிரஸ் கட்சியுடன் மிக முக்கியமான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் தொகுதி எண்ணிக்கை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக-வில் இருந்து விலகி திமுக கூட்டணிக்கு வந்துள்ள தேமுதிக மற்றும் கடந்த தேர்தலில் ஆதரவு அளித்த நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய புதிய கூட்டணிக் கட்சிகளுக்காக, பழைய கூட்டணிக் கட்சிகள் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாளை (பிப். 23) கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், வைகோவின் மதிமுக மற்றும் ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அடுத்த சில நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும் என்பதால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கிறது.
