தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே வேளையில், கட்சியின் நிர்வாகி ஒருவர் தூய்மைப் பணியாளர் குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. சின்னம் கிடைத்த உற்சாகத்தில் கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்த விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான செயல் வீரர்கள் கூட்டம் இன்று வியாசர்பாடியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. செங்கோட்டையன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும்” என்ற சிறப்புத் தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார். இதற்குத் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சென்னை மாநகரின் முக்கியத் தொகுதியான பெரம்பூரில் விஜய் போட்டியிட்டால் அது மாநிலம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிர்வாகிகள் ஆலோசித்தனர்.

இந்த உற்சாகத்திற்கு இடையே, கூட்டத்தில் பேசிய தவெக நிர்வாகி வி.எஸ். பாபுவின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சியின் சின்னமான விசிலைப் பிரபலப்படுத்துவது குறித்துப் பேசிய அவர், “எனது பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளரை மிரட்டி விசிலடிக்க வைத்தேன்” என்று குறிப்பிட்டார். அதாவது தூய்மை பணியாளரை எட்டி உதைப்பேன் என்று கூறி விசில் அடிக்க வைத்ததாக அவர் கூறினார்

எளிய மக்களின் உரிமைகளுக்காகவும் கண்ணியத்திற்காகவும் கட்சி பாடுபடும் எனத் தலைமை கூறி வரும் நிலையில், ஒரு நிர்வாகி பகிரங்கமாக ‘மிரட்டிப் பணிய வைத்ததாக’ பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் போட்டி குறித்த தீர்மானமும், நிர்வாகியின் சர்ச்சைப் பேச்சும் தமிழக அரசியலில் இன்று பேசுபொருளாகியுள்ளது.