இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்களைக் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபரை கேரளா மாநில போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் இவரிடம் ஏமாந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள தான்யம் பகுதியைச் சேர்ந்தவர் யது கிரிஷ் (38). இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். சமூக வலைதளங்கள் மூலம் கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான இளம் பெண்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தான் ஒரு வசதியானவர் என்பது போலக் காட்டி, பெண்களிடம் நெருங்கிப் பழகிய யது கிரிஷ், அவர்களைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இவரது பேச்சை நம்பி ஏமாந்த பெண்களைத் தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

குற்றவாளி யது கிரிஷ் தான் செய்யும் அத்துமீறல்களைத் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவைக் காண்பித்து மிரட்டி, பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவர்களிடமிருந்து பெருந்தொகையையும் பறித்ததாகக் கூறப்படுகிறது.

யது கிரிஷால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் தைரியமாக முன்வந்து திருச்சூர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி யது கிரிஷைக் கைது செய்தனர்.

அவரது செல்போனைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அதில் ஏராளமான பெண்களின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதுவரை 20-க்கும் மேற்பட்ட பெண்கள் இவரிடம் சிக்கிச் சீரழிந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவமானத்திற்குப் பயந்து இன்னும் பல பெண்கள் புகார் அளிக்க முன்வரவில்லை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்ட மற்ற பெண்களையும் அடையாளம் கண்டு, அவர்களின் வாக்குமூலத்தைப் பெற போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் முகம் தெரியாத நபர்களிடம் பழகும்போது பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.