அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்திலேயே அக்கட்சிக்கு ஒரு பெரிய ‘ஷாக்’ கொடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன். அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவில் முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர், 2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டவர். தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து விலகி, தளபதி விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (TVK) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
லோகேஷ் தமிழ்ச்செல்வனின் பின்னணி மிகவும் வலுவானது. இவருக்கு பெயர் வைத்தது பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், இவரது திருமணத்தை நடத்தி வைத்தது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. இப்படி ரத்தமும் சதையுமாக அதிமுக குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே விஜய்யின் பக்கம் சாய்ந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை அதிமுகவின் வாக்கு வங்கியில் கைவைக்கத் தொடங்கிவிட்டதா என அரசியல் நோக்கர்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
