ஹைதராபாத்தில் தனது முன்னாள் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர், தனது தாயின் மரணத்திற்கு அவர் கொடுத்த மன உளைச்சலே காரணம் என்று வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண், தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்ற முன்னாள் கணவர், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணை சரமாரியாகக் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், தனது தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, முன்னாள் மனைவி கொடுத்த தொடர்ச்சியான மன அழுத்தமும், குடும்பப் பிரச்சினைகளுமே அவரது இறப்பிற்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் தாயின் இழப்பால் ஏற்பட்ட ஆத்திரமும், பழிவாங்கும் உணர்ச்சியுமே தன்னை இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியதாக அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், கொலையாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.