மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 25 எம்.பி.க்களை வீடு புகுந்து சுட்டுக் கொல்வேன் என்று வீடியோ வெளியிட்டு மிரட்டிய வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த நபர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரைச் சேர்ந்த ராஜ் சிங் என்பவர், ‘கர்ணி சேனா’ என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளராக உள்ளார். இவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ராகுல் காந்தி மற்றும் 25 காங்கிரஸ் எம்.பி.க்களுக்குப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இது குறித்துப் புகார் எழுந்ததையடுத்து, ராஜஸ்தான் போலீசார் ராஜ் சிங்கைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வீடியோவில் ராஜ் சிங் பேசியதாவது: “மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை காங்கிரஸ் எம்.பி.க்கள் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் பாஜக மற்றும் கர்ணி சேனா தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்தால், ராகுல் காந்தி உள்ளிட்ட 25 எம்.பி.க்களின் வீட்டிற்குள்ளேயே புகுந்து உங்களைச் சுட்டுக் கொல்வோம் என்றார்.

இந்த மிரட்டல் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைக் கடுமையாகச் சாடியுள்ளது. அதன்படி பவன் கேரா (காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்)பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் பின்னணி என்பது ஒரு ‘கோட்சே தொழிற்சாலை’ போன்றது. ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் ஒரு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதியாகும்.”

சுப்ரியா ஸ்ரீனேத் (காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்) “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பொதுவெளியில் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. ஒரு குண்டர் பகிரங்கமாகத் துப்பாக்கியால் சுடுவேன் என்று மிரட்டியும் மத்திய உள்துறை அமைச்சகம் ஏன் மௌனமாக இருக்கிறது? இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மற்றும் அரசியல் விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவருக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த நேரடி மிரட்டல் தேசிய அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.