மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில், அவரது மகன் ஜெய் பவார் தற்போது புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளார். விபத்துக்குள்ளான விமானத்தின் ‘கருப்பு பெட்டி’ (Black Box) சேதமடைந்துள்ள தகவல் அவரது  இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற்ற கோர விமான விபத்தில் அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். மறைந்த அஜித் பவார், அண்மைக் காலமாக பாஜகவின் ஊழல்களைப் பகிரங்கமாக விமர்சித்து வந்ததுடன், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டிருந்தார். இந்தச் சூழலில் அவரது மரணம் திட்டமிடப்பட்ட சதியோ என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கேள்வி எழுப்பி வந்தன.

விமான விபத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய உதவும் ‘கருப்பு பெட்டி’ அண்மையில் மீட்கப்பட்டது. ஆனால், அது தீயில் கருகி கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அஜித் பவாரின் இளைய மகன் ஜெய் பவார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

விமானத்தின் பிளாக் பாக்ஸ் என்பது அவ்வளவு எளிதில் அழிந்துவிடக் கூடியது அல்ல. இந்த விபத்தின் பின்னணியில் உள்ள முழுமையான உண்மையை அறிய மகாராஷ்டிர மக்களுக்கு உரிமை உண்டு. விபத்துக்குள்ளான லியர்ஜெட் விமானத்தை இயக்கிய நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, அஜித் பவாரின் மனைவியும் தற்போதைய துணை முதல்வருமான சுநேத்ரா பவார் மற்றும் மூத்த மகன் பார்த் பவார் ஆகியோர் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை நேரில் சந்தித்துப் பேசினர். இந்த விபத்து குறித்து மத்திய புலனாய்வுத் துறை (CBI) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் ஒரு முக்கியத் தலைவரின் மரணம் விபத்தா அல்லது கொலையா என்ற விவாதம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. விமானத்தை இயக்கிய தனியார் நிறுவனத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.