பெங்களூரு இந்திராநகர் பகுதியில் ஓய்வுபெற்ற பி.எம்.டி.சி. ஓட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், கொலையின் பின்னணி குறித்துப் புதிய மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா (70). பி.எம்.டி.சி-யில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 16-ஆம் தேதி முனிகிருஷ்ணப்பா அவரது வீட்டில் ஆக்கி மட்டையால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, முனிகிருஷ்ணப்பாவின் மகன் மோகன்குமாரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு மகன் கஜேந்திராவை போலீசார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பல கோடி ரூபாய் சொத்துகளைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே மகன்கள் தந்தையைக் கொன்றதாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது முனிகிருஷ்ணப்பாவின் மனைவியே அளித்துள்ள வாக்குமூலம் வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாவது: இந்தக் கொலை சொத்துக்காக நடக்கவில்லை. முனிகிருஷ்ணப்பா தனது மருமகளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இது குறித்து அறிந்த மகன் மோகன்குமார், தந்தையைக் கண்டித்ததால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று, தனது மகன்களையே கொலை செய்யத் திட்டமிட்டு முனிகிருஷ்ணப்பா கத்தி மற்றும் கட்டைகளுடன் காத்திருந்தார். அப்போது நடந்த மோதலில்தான் அவர் கொல்லப்பட்டார் என்றார்.
சொத்து தகராறால் கொலை நடந்ததா அல்லது மருமகளுடனான கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மகன்களே ஆத்திரத்தில் தந்தையைத் தீர்த்துக்கட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும் பல கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள ஒரு குடும்பத்தில், தந்தை-மகன்களுக்கு இடையே நிலவிய ஒழுக்கக்கேடான விவகாரம் கொலையில் முடிந்துள்ள சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
