சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 92 வயது மூதாட்டி ஒருவர், அங்கிருந்து வெளியேறுவதற்காக சுமார் 7 அடி உயரமுள்ள இரும்பு நுழைவு வாயிலை வெறும் 24 வினாடிகளில் அசால்ட்டாக ஏறி குதித்து கடந்துள்ளார்.
இந்த வியக்க வைக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “வயது வெறும் எண்தான்” என அவரது உடல் வலிமையையும் சுறுசுறுப்பையும் பார்த்து ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயுள்ளனர்.
இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கு பின்னால் ஒரு கவலையான காரணமும் உள்ளது. அந்த மூதாட்டி ‘அல்சைமர்’ எனப்படும் தீவிர மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால், எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, இல்லத்தின் ஊழியர்கள் அவரைத் தேடிப் பிடித்து பாதுகாப்பாக மீண்டும் அழைத்து வந்தனர். இந்த வீடியோ மூதாட்டியின் உடல் உறுதியைப் பறைசாற்றினாலும், மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பும் கவனமும் தேவை என்பதை நமக்கு உணர்த்துகிறது.
