தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வரும் ஏப்ரல் மாதம் 2-ம் வாரத்தில் தேர்தல் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது கட்சியின் அதிரடி நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பிரேமலதா, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவதாக உறுதிப்படுத்தினார். கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் முதல்முறையாக திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது அரசியல் வட்டாரத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்தக் கூட்டணி குறித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மறைந்த தலைவர் விஜயகாந்த் இருந்தபோதே அமைந்திருக்க வேண்டிய கூட்டணி இது என்றும், வரும் தேர்தலில் இந்தக் கூட்டணி இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்கும் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசத் தனிக்குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே தேமுதிகவின் இந்தத் திடீர் கூட்டணி மாற்றம் குறித்துச் சட்டமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் பின்னர் பதில் சொல்வதாகக் கூறித் தவிர்த்துச் சென்றார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகித் தேமுதிக எடுத்துள்ள இந்த முடிவு வரும் தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
