தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் கடந்த 2022-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி லாவண்யா விவகாரத்தில், பாஜகவின் பொய்ப் பிரச்சாரம் சிபிஐ விசாரணை மூலம் அம்பலமாகியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மாணவியின் மரணத்திற்கு மதமாற்ற அழுத்தம் காரணம் இல்லை என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. எவ்வித ஆதாரமும் இன்றி மதமாற்றமே காரணம் என அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது, அரசியல் ஆதாயத்திற்காகச் செய்யப்பட்ட அவதூறு என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

மகளை இழந்து தவித்த பெற்றோரை ஆறுதல்படுத்தாமல், அவர்களைத் தவறாக வழிநடத்தி போராட்டக் களத்திற்கு இழுத்து வந்த அண்ணாமலையின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் என்று செல்வப்பெருந்தகை சாடியுள்ளார்.

தமிழகத்தின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும், சிறுபான்மையினரின் கல்விச் சேவையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் பாஜகவினர் பதற்றமான சூழலை உருவாக்கினர். இதன் மூலம் பாஜகவின் கீழ்த்தரமான மதவெறுப்பு அரசியல் வெளிப்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அரசியலாக்கி, சமூக அமைதிக்குக் கேடு விளைவிக்க முயன்ற அண்ணாமலை மற்றும் பாஜக மாவட்டத் தலைவர் மீது தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

சிபிஐ விசாரணையின் மூலம் உண்மை வெளிவந்துள்ள நிலையில், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே காங்கிரஸின் கோரிக்கையாக உள்ளது.