வாழ்க்கையில் முன்னேற வசதிகளும், சரியான நேரமும் வேண்டும் என்று சாக்குப்போக்கு சொல்பவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளது பெலகாவியைச் சேர்ந்த பிரதாப் சிவங்கேகரின் கதை. எட்டாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுவன், அதிகாலை 5:30 மணிக்கே எழுந்து மாடுகளை மேய்க்கச் செல்கிறான். அங்கு மாடுகள் புல் மேய்ந்து கொண்டிருக்கும்போது, வெறும் தரையில் அமர்ந்து தனது புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்த ஒருவர் வீடியோ எடுத்துப் பகிர, அந்தச் சிறுவனின் அர்ப்பணிப்பு இணையத்தில் வைரலாகி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

​பிரதாப் வெறும் படிப்பில் மட்டுமல்ல, விளையாட்டிலும் கில்லாடி என்பதுதான் இதில் கூடுதல் ஹைலைட். 2025-ம் ஆண்டு நடைபெற்ற ‘மிஷன் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில்’ தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளான். வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு, மல்யுத்தப் பயிற்சியையும் விடாமல், வயல்வெளியையும் வகுப்பறையாக மாற்றிய இந்தச் சிறுவன், “உழைக்க நினைப்பவனுக்குத் தடைகள் ஒரு பொருட்டல்ல” என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளான்.