பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள ஷெர்வா மண்டிஹா கிராமத்தைச் சேர்ந்த உபேந்திர குமார் என்ற 23 வயது இளைஞர், தனது எருமை மாடுகளைக் குளிப்பாட்டச் சென்றபோது புலியிடமிருந்து உயிர் தப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

திங்கட்கிழமை காலை பண்டாய் ஆற்றின் கரையில் தனது 7 எருமைகளை உபேந்திரா குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, புதர்களுக்குள் பதுங்கியிருந்த புலி ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்துத் தாக்கியது. புலி அவரை நகங்களால் பிறாண்டிக் கொல்ல முயன்ற வேளையில், அங்கிருந்த மூன்று எருமை மாடுகள் ஆவேசமடைந்து புலியை எதிர்த்துத் தாக்கத் தொடங்கின.

தங்கள் எஜமானரைச் சிகப்புப் புலியின் பிடியில் இருந்து மீட்கும் நோக்கில், அந்த எருமை மாடுகள் தங்கள் கூர்மையான கொம்புகளால் புலியை முட்டித் தாக்கி அதனைப் பின்வாங்கச் செய்தன. எருமைகளின் இந்த அதிரடித் தாக்குதலில் காயமடைந்த புலி, அங்கிருந்து தப்பித்து அடர்ந்த புதர்களுக்குள் ஓடி மறைந்தது.

இதில் பலத்த காயமடைந்த உபேந்திர குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது உயிர் தப்பியுள்ள நிலையில், ஆபத்தான நேரத்தில் விலங்குகள் காட்டிய விசுவாசம் மற்றும் துணிச்சலைக் கண்டு அப்பகுதி மக்கள் வியந்து போயுள்ளனர்.