பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதப்போவதில்லை என அறிவித்துள்ளார். பிப்ரவரி 17 முதல் மார்ச் 11 வரை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், அவருக்கான ஹால் டிக்கெட் ஏற்கனவே வந்துவிட்டது. இருப்பினும், கிரிக்கெட் போட்டிகளில் பிஸியாக இருப்பதாலும், தொடர் பயிற்சிகள் காரணமாகவும் அவர் தேர்வை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அவரது பள்ளி இயக்குநரும் குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.
வைபவ் தேர்வு எழுத வரும்போது, அங்கு ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் அதிக அளவில் கூடி கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தப் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டும், கிரிக்கெட் மீதான கவனத்தைச் சிதறவிடாமல் இருக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2011-இல் பிறந்த வைபவ், மிகச்சிறிய வயதிலேயே ஐபிஎல் ஏலத்தில் பல கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை மற்றும் தாத்தாவின் முழு ஆதரவுடன், தற்போது முழு நேரமும் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வைபவ் திட்டமிட்டுள்ளார்.
