ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளி பகுதியில் வசித்து வந்த ரமாதேவி என்ற பெண் கடந்த ஏழாம் தேதி தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் ரமாதேவியின் மகள் லட்சுமியைக் கைது செய்துள்ளனர்.

தனது தாயின் தவறான நடத்தையாலும் அவர் தன்னை விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தியதாலும் ஆத்திரமடைந்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதாக லட்சுமி காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரின் விசாரணையில் லட்சுமி அளித்துள்ள தகவலின்படி ரமாதேவியின் தவறான போக்கினால் மனமுடைந்த அவரது கணவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு ரமாதேவியின் மகனும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார்.

இந்தச் சூழலில் லட்சுமிக்குத் தாயின் பிடியில் இருந்து தப்பிக்க நான்கு முறை திருமணங்கள் நடைபெற்றும் ரமாதேவியின் நடத்தையைக் காரணம் காட்டி நான்கு கணவர்களும் லட்சுமியைப் பிரிந்து சென்றுள்ளனர். இதனால் ஆதரவற்ற நிலையில் இருந்த லட்சுமியை மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபடுமாறு ரமாதேவி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது.

தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் விபச்சாரத்திற்கு மறுப்பு தெரிவித்த லட்சுமி தனது தாயைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த எட்டாம் தேதி இரவு பாலில் மயக்க மாத்திரைகளைக் கலந்து ரமாதேவிக்குக் கொடுத்துள்ளார். அவர் மயக்கமடைந்ததை அடுத்து அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

தற்போது கைதாகியுள்ள லட்சுமியிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தாயின் தவறான ஆசையால் ஒரு குடும்பமே சிதைந்து போனதுடன் தற்போது அவரது மகளும் கொலையாளியாக மாறியுள்ள இச்சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.