உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி ஓட்டுநர் ஒருவரை அவரது மனைவியும், நண்பரும் சேர்ந்து கோடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமித் சிங். லாரி ஓட்டுநரான இவருக்கு, அதே தொழிலைச் செய்து வரும் தீபக் என்பவர் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். நண்பன் மீது கொண்ட அதீத நம்பிக்கையால், தீபக்கை அடிக்கடி தனது வீட்டிற்கு அமித் அழைத்து வந்துள்ளார். இந்த பழக்கம், அமித் சிங்கின் மனைவி ஷில்பி சிங் மற்றும் தீபக் ஆகிய இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.
இருவருக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து அமித் சிங்கிற்குத் தெரியவந்தபோது, வீட்டில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் முன்னிலையில் இருவரும் எச்சரிக்கப்பட்ட போதிலும், தங்களது தொடர்பைக் கைவிடாத ஷில்பியும் தீபக்கும், தங்களுக்கு இடையூறாக இருக்கும் அமித் சிங்கைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர்.
அதன்படி கடந்த சனிக்கிழமை இரவு, அமித் சிங் தனது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, தீபக் அங்கு வந்துள்ளார். ஷில்பியின் உதவியுடன், உறங்கிக் கொண்டிருந்த அமித் சிங் மீது தீபக் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கினார். இந்த கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்த அமித் சிங், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அமித் சிங்கின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனைகள் நடத்தப்பட்டன. இக்கொலை தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவி ஷில்பி சிங் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான தீபக்கை பிடிக்கஎஸ்.பி. சாரு நிகம் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
