தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் பொது இடங்களிலும், கட்சி நிகழ்வுகளிலும் ஊடகச் செய்தியாளர்களிடம் அநாகரீகமாக நடந்துகொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

குறிப்பாக, சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளரின் காதருகே வந்து சத்தமிட்டு இடையூறு செய்த தொண்டர் ஒருவரிடம் செய்தியாளர் மைக்கை நீட்டி கேள்வி எழுப்பினார்.

அப்போது விஜய் தான் அடுத்த முதலமைச்சர் என்று பேசிக்கொண்டிருந்த அந்தத் தொண்டரிடம், முடங்கிக்கிடக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படப் பிரச்சினைக்கே தீர்வு காண முடியாத விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றுவார் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி குறித்து செய்தியாளர் வினவியதும், அவர் பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து நழுவிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் தவெகவினரிடையே தொடர்கதையாகி வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு அரியலூரில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, செய்தியாளரின் கழுத்தில் வலுக்கட்டாயமாக கட்சிக் கொடியைக் கட்டியும், தலையில் துண்டைப் போட்டும் ஒரு தொண்டர் அநாகரீகமாக நடந்துகொண்டது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.

மேலும், விஜய் செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் அபாயகரமான முறையில் பயணம் செய்வதும், கைக்குழந்தைகளுடன் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதும் தொண்டர்களின் முதிர்ச்சியற்ற செயல்பாடுகளாகவே பார்க்கப்படுகின்றன.

காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தவெக தொண்டர்களின் இத்தகைய அட்டுழியங்கள் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக நடுநிலையாளர்கள் விமர்சிக்கின்றனர். அரசியல் களத்தில் முதல் முறையாக அடியெடுத்து வைக்கும் விஜய், தனது தொண்டர்களுக்கு முறையான ஒழுக்கத்தையும், ஊடகங்களிடம் கண்ணியமாக நடப்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு மாற்றாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயலும் வேளையில், இத்தகைய செயல்கள் கட்சியின் வளர்ச்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.