தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நவீன பேருந்து நிலையத்தைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், பட்டுக்கோட்டை நகராட்சி முழுவதும் சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அறிவுசார் மையங்கள் எனப் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, தமிழக அரசின் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பெண்கள் 30 கோடி முறை பயணம் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மகளிர் உரிமைத் தொகையுடன் கோடைக்கால சிறப்புத் தொகையும் சேர்த்து பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறி அரசின் சாதனைகளை விளக்கினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகளைச் சாடிப் பேசிய உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பாஜகவின் ‘முரட்டு அடிமையாக’ செயல்படுவதாகக் கடுமையாக விமர்சித்தார். “மோடிக்கு ஏற்ற மூடி எடப்பாடி” என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் நிதி உரிமையைப் பறிக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டை அதிமுக வரவேற்பது கண்டனத்திற்குரியது என்றார்.

எத்தனை முறை தோல்வியைத் தழுவினாலும் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் மோடியும் தமிழக மக்களிடம் செல்வாக்கு பெற முடியாது என்றும், அடுத்தும் திமுக அரசுதான் அமையும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார். விழா முடிந்ததும் அங்கிருந்த கரும்புகள் மற்றும் வாழை மரங்களைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் எடுத்துச் சென்றனர்.