பிரேப்பர் மீடியா (Praper Media) நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி அசுதோஷ் குப்தா, தான் சந்தித்த ஒரு மோசமான ‘ஹைரிங்’ அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். தனது நிறுவனம் சிறியதாக இருந்தபோது, வெறும் இன்டர்வியூ மற்றும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்து ‘சிராக்’ என்பவரை வேலைக்குச் சேர்த்துள்ளனர். முந்தைய நிறுவனத்தில் ₹40,000 சம்பளம் வாங்கியதாகப் பொய் சொன்ன அவருக்கு, அசுதோஷ் ₹45,000 சம்பளம் கொடுத்துள்ளார். ஆனால், வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகே சிக்கல் ஆரம்பித்துள்ளது.
மற்ற ஜூனியர் எடிட்டர்கள் ஒரு நாளைக்கு 3 வீடியோக்களை எடிட் செய்யும் நிலையில், சிராக் ஒரு வீடியோவிற்கே 2 நாட்கள் எடுத்துள்ளார். அதுவும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்துள்ளது. சந்தேகமடைந்த அசுதோஷ் குப்தா, சிராக்கின் முந்தைய நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோதுதான் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. அவர் முந்தைய நிறுவனத்தில் வாங்கியது ₹25,000 தான்; அதுமட்டுமல்லாமல், அவர் வேலையை ராஜினாமா செய்யவில்லை, அவரது மோசமான செயல்பாடுகளுக்காக வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
தான் கொடுத்த மேனேஜர் போன் நம்பரும் அவரது நண்பருடையது என்பது தெரியவந்தது. இந்த ஒரு தவறான தேர்வால் சம்பளம், பயிற்சி மற்றும் மாற்று ஆள் எடுப்பு என மொத்தம் ₹2 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், 4 மாத உழைப்பு வீணானதாகவும் அசுதோஷ் வேதனை தெரிவித்துள்ளார். இதையடுத்து, பின்னணி சரிபார்ப்பு (Background Verification) இனி கட்டாயம் என அவர் அதிரடி முடிவெடுத்துள்ளார்.
