புதுக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேடையில் ஆக்ரோஷமாகப் பேசிய அவர், “அரசு கொடுக்கும் காசு எதுவாக இருந்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் ஓட்டு போடும்போது மட்டும் இரட்டை இலைக்குத்தான் போட வேண்டும்” எனத் தொண்டர்களிடம் வெளிப்படையாகவே ‘டீல்’ பேசினார். இது ஒருபுறம் இருக்க, அடுத்து அவர் பேசிய விஷயம் தான் இப்போது விவாதமாகியுள்ளது.
கூட்டத்தில் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்த அவர், “உங்கள் வீட்டுப் பக்கத்துல பாட்டிகள் யாராவது இருந்தா அவங்களை இப்போதே கரெக்ட் பண்ணிடுங்க.. இல்லைன்னா தலையணை வச்சு முடிச்சுடுங்க” எனத் திடுக்கிடும் வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் என்ன சொல்கிறார் என்று தொண்டர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்துபோக, உடனே சுதாரித்துக்கொண்ட அவர், “அதாவது அந்த வாக்குக் கணக்கு வழக்கைச் சொன்னேன்” என்று சிரித்துக்கொண்டே சமாளித்தார்.
பெரியவர்களைக் கவனித்து அதிமுக-விற்கு வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அவர் இதைச் சொன்னாலும், ‘தலையணை வைத்து முடிப்பது’ என்பது பொதுவாகக் கொலை செய்வதைக் குறிக்கும் ஒரு கொச்சையான சொல்லாகும். ஒரு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரே இப்படிப் பொதுமேடையில் முதியவர்களைப் பற்றிப் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. “கணக்கு வழக்கைத் தீர்க்கச் சொன்னாரா? இல்லை பாட்டிகளைத் தீர்க்கச் சொன்னாரா?” என எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை வைத்து இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
