பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்த்வா தோலா பகுதியில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில், பெண் நடனக் கலைஞர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேடையில் அந்தப் பெண் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சிலர் கட்டுப்பாட்டை மீறி மேடை மீது ஏறியுள்ளனர்.

​அப்போது, நடனக் கலைஞரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில், அங்கிருந்த சிலர் அந்தப் பெண்ணின் வாய்க்குள் வலுக்கட்டாயமாக நாணயங்களைத் திணித்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக ஒரு நாணயம் அந்தப் பெண்ணின் தொண்டைக்குள் சென்று சிக்கியுள்ளது. இதனால் மூச்சுவிட முடியாமல் அந்தப் பெண் மேடையிலேயே துடிதுடித்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

​பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ராஜு குமார் கூறுகையில், “என் மனைவி ஆடிக்கொண்டிருந்த போது மேடையில் ஏறிய சிலர் அவள் வாயில் நாணயங்களைத் திணித்தனர். அதில் ஒரு நாணயத்தை அவள் விழுங்கிவிட்டாள். நிலைமை மோசமானதால் உடனே மருத்துவமனைக்குத் தூக்கி வந்தோம்” என வேதனையுடன் தெரிவித்தார். ஆரா சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தொண்டையிலிருந்த நாணயம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இருப்பினும், உட்புற காயங்கள் காரணமாக அவர் இன்னும் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ரகளையில் ஈடுபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.