மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தண்ணீர் தொட்டிக்குள் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் காதலில் தொடங்கி கொலையில் முடிந்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. உயிரிழந்தவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 33 வயதான அஷ்ரஃபி என்கிற சியா என்பது தெரியவந்துள்ளது.

​ஆட்டோ ஓட்டுநரான சமீர் என்பவனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சியா, அவனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு போபாலுக்கு வந்துள்ளார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்திருந்த சமீர், சியாவை தனது ‘சாலி’ (மைத்துனி) என்று அக்கம் பக்கத்தினரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால், ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், சமீரின் இரண்டாவது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த இடைவெளியில் சியாவுக்கும் சமீர்-க்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.

​மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சமீர் சியாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான். ஆதாரத்தை மறைக்க, தனது இரண்டாவது திருமணத்தில் வரதட்சணையாகக் கிடைத்த அதே ‘டின்’ பெட்டிக்குள் சியாவின் உடலை அடைத்து, வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளான். பின்னர் எதற்கும் தெரியாதது போல தனது இரண்டாவது மனைவியை அழைத்து வர ஜபல்பூர் சென்றுள்ளான். சியாவின் கையில் இருந்த ‘தீப்’ என்ற டாட்டூவை வைத்து போலீஸார் அடையாளத்தைக் கண்டுபிடித்தனர். தற்போது கைதாகியுள்ள சமீர், அந்தப் பெட்டி வரதட்சணையாக வந்தது என்பதையும், கொலைக்கு அதையே பயன்படுத்தியதையும் ஒப்புக்கொண்டுள்ளான்.