கடந்த ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், குடியிருப்பு கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக இத்தாலிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே அதன் 2 என்ஜின்களும் திட்டமிட்டு அணைக்கப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. விமானத்தின் தலைமை விமானி சுமித் சபர்வால் மன அழுத்தம் காரணமாக இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இருப்பினும், இந்த விபத்து குறித்த விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. ஊடகங்களில் வெளியாகும் இத்தகைய செய்திகள் வெறும் ஊகங்களே என்றும், தொழில்நுட்பக் கோளாறு அல்லது மனிதத் தவறு என்பது குறித்து இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் எட்டப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

போயிங் ரக விமானத்தின் இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் செயலிழக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், அதிகாரப்பூர்வ இறுதி அறிக்கை வெளியான பிறகே விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.