கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கண்ணக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். 78 வயதான இவர் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஓமனாவுக்கு 74 வயதாகிறது.
இந்தத் தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில் ஒருவருக்கொருவர் துணையாக இன்ப துன்பங்களைப் பகிர்ந்து இல்லற வாழ்க்கையில் முன்மாதிரியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஓமனா திடீரென உயிரிழந்தார். தனது வாழ்நாள் துணையாக இருந்த மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கருணாகரன் மிகுந்த மனவேதனையில் துடிதுடித்துப் போனார்.
மனைவியின் இறப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்த அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி கருணாகரன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். மனைவி இறந்த சில மணி நேரத்திலேயே கணவரும் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
