ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சர்வதேச ஹாக்கி போட்டியில் பங்கேற்கச் சென்ற பாகிஸ்தான் தேசிய ஹாக்கி அணி வீரர்கள், ஹோட்டல் கட்டணம் செலுத்தப்படாததால் பல மணி நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் நிதி நெருக்கடியே இந்தச் சங்கடத்திற்குத் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
ஹோபார்ட்டில் நடைபெற்று வரும் ‘எப்.ஐ.எச். புரோ லீக்’ (FIH Pro League) தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகளுக்காகப் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. கான்பெர்ராவில் உள்ள ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான முன்பணத்தை பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் (PSB) செலுத்திவிட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், வீரர்கள் ஹோட்டலுக்குச் சென்றபோது, கட்டணம் செலுத்தப்படாத காரணத்தால் அவர்களது முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால், லாகூரிலிருந்து நீண்ட பயணம் மேற்கொண்டு சோர்வடைந்திருந்த வீரர்கள், தங்குவதற்கு இடமின்றிச் சாலைகளிலேயே அலைந்தனர்.
அணியின் தலைமை பயிற்சியாளர் தாஹிர் ஜமான், பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான நேர வித்தியாசம் காரணமாக யாரையும் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, ஹோட்டல் நிர்வாகம் சமாதானமாகி சில அறைகளை மட்டும் ஒதுக்கியது.
இதனால், ஒரு அறையில் மூன்று வீரர்கள் வரை தங்கும் நிலை ஏற்பட்டது. முறையான ஓய்வு மற்றும் தூக்கம் இல்லாத நிலையில், அடுத்த நாளே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் களமிறங்கியது. இந்தச் சோர்வு ஆட்டத்திலும் எதிரொலித்தது. அப்போட்டியில் பாகிஸ்தான் அணி 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளிலும் அந்த அணி தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் இது போன்ற நிதி நெருக்கடியைச் சந்திப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அர்ஜென்டினாவில் நடைபெற்ற போட்டியின் போது, வீரர்களுக்குத் தினசரி படி வழங்கப்படாததால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பாகிஸ்தானின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
