முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணையப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

ஓபிஎஸ் தரப்பு கூட்டணி விவகாரத்தில் எடுத்து வரும் மௌனமான நிலைப்பாடும், அரசியல் நகர்வுகளில் நிலவும் தொய்வும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, “இனி ஓபிஎஸ்-உடன் இருந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும்” என முடிவெடுத்த வெல்லமண்டி நடராஜன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மூலமாகத் தவெக-வில் சேர காய் நகர்த்தி வருகிறாராம்.

இந்தத் தகவல் ஓபிஎஸ் காதுகளுக்கு எட்டியதையடுத்து, அவர் தனது பழைய விசுவாசியைத் தக்கவைக்க அவசர சமாதானப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே ஓபிஎஸ் அணியின் ‘விக்கெட்டுகள்’ அடுத்தடுத்து சரிவது அரசியல் களத்தில் விவாதமாகியுள்ளது.