ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் ஒரு டீயையோ அல்லது சிற்றுண்டியையோ சாப்பிட்டுவிட்டு, மணிக்கணக்கில் அங்கேயே அமர்ந்து அரட்டை அடிப்பவர்களுக்கும், லேப்டாப்பை வைத்துக்கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கும் பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு நீண்ட நேரம் இருக்கைகளை ஆக்கிரமிப்பதால் புதிய வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதோடு, ஹோட்டல்களின் வருமானமும் குறைவதாக உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

​இதனைத் தடுக்க, குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் “டேபிள் கட்டணம்” அல்லது “அபராதம்” வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டணம் ரூ.500 முதல் ரூ.1,000 வரை இருக்கலாம் என்று பெங்களூரு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.சி. ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடக அரசிடம் அனுமதி கோரப்பட உள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் இந்த புதிய விதி அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. பெங்களூருவில் அமல்படுத்தப்படும் இந்த ‘அபராத கலாச்சாரம்’ விரைவில் சென்னை போன்ற மற்ற பெருநகரங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.