அறுவை சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவரின் நுரையீரலில் மூக்குத்தி திருகாணி சிக்கியிருந்ததை எக்ஸ்-ரே மூலம் கண்டறிந்த மருத்துவர் பிரியா பாட்டீல், இது குறித்து விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆபரணங்கள் அணியும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
View this post on Instagram
மூக்குத்தி போன்ற சிறிய பொருட்கள் பேசும்போதோ, சிரிக்கும்போதோ அல்லது தூங்கும்போதோ தளர்வாக இருந்தால், அவை எதிர்பாராத விதமாக மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்குள் சென்றுவிடும் அபாயம் உண்டு. இவ்வாறு நுழையும் பொருட்கள் சிறியதாக இருந்தால், அவை உடனடியாக சுவாசத்தைத் தடுக்காது என்பதால் பலருக்கும் இது நிகழ்ந்தது தெரிவதில்லை.
சிலருக்கு லேசான இருமல் அல்லது தொண்டை அசௌகரியம் மட்டுமே ஏற்பட்டு சட்டென்று மறைந்துவிடும் என்பதால், இப்படியொரு ஆபத்து இருப்பதை அவர்கள் உணருவதே இல்லை. நுரையீரலில் இப்படியான வெளிப்பொருள் நீண்ட காலம் தங்கியிருப்பது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாவிட்டாலும், காலப்போக்கில் அந்தப் பொருள் நுரையீரலின் உட்பகுதியை அரித்து வீக்கம், ரத்தப்போக்கு அல்லது கடுமையான தொற்றுநோய்களை உருவாக்கக்கூடும். நாள்பட்ட இருமல், மூச்சு விடுவதில் சிரமம் அல்லது அடிக்கடி ஏற்படும் நெஞ்சுத் தொற்று ஆகியவை இதற்கு அறிகுறியாக இருக்கலாம்.
நவீன மருத்துவ முறையில் அறுவை சிகிச்சை இல்லாமலேயே ‘புரான்கோஸ்கோபி’ என்ற நுண்துளை குழாய் சிகிச்சை மூலம் இத்தகைய பொருட்களைப் பாதுகாப்பாக அகற்ற முடியும். எனவே, மூக்குத்தி, கம்மல் போன்ற சிறிய அணிகலன்கள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி சரிபார்ப்பதுடன், படுத்திருக்கும்போது அவற்றைச் சரி செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
