உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் திருமண ஆசை காட்டி பணத்தைச் சூறையாடும் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆக்ராவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு அழகான பெண்களின் புகைப்படங்களைக் காட்டி ஆசை வார்த்தை கூறிய இந்தக் கும்பல், பின்னர் சிவபெருமான் கோவிலில் வைத்துத் திருமணத்தை நடத்தியுள்ளது.
திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் தானியங்கி வாகனத்தில் ரயில் நிலையம் நோக்கிச் சென்றபோது, தனக்குக் குளிராக இருப்பதாகக் கூறி மணமகன் குடும்பத்தினரை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் மணப்பெண் தப்பியோட முயன்றுள்ளார்.
ஆனால் விழிப்புடன் இருந்த மணமகன் தரப்பினர் அந்தப் பெண்ணைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்ததன் மூலம் இந்த மெகா மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் ஒரு திட்டமிட்ட கும்பலாகச் செயல்பட்டு வருவது தெரியவந்தது.
கைபேசி செயலி மூலம் குழுக்களை உருவாக்கி, அதில் பெண்களின் படங்களைப் பகிர்ந்து ஏமாந்த வாலிபர்களைத் தேடிப் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருமணத்திற்காகப் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு, பின்னர் பாதி வழியில் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி நகைகளுடன் மணப்பெண் மாயமாகிவிடுவார்.
கௌரவம் கருதிப் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் புகார் அளிக்க முன்வராததை இந்தக் கும்பல் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. தற்போது ஜிதேந்திரா, ராம்விலாஸ் உள்ளிட்ட ஆறு பேரைச் சிறையில் அடைத்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான அஜித்தை வலைவீசித் தேடி வருகின்றனர்.
