ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே, குடிகாரக் கணவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் மனைவியும் மகனும் சேர்ந்து அவரைக் கொலை செய்துவிட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருமேனி பகுதியைச் சேர்ந்த மீனவர் குப்புசாமி, தினசரி குடித்துவிட்டு வந்து தனது மனைவி சீனியம்மாளை அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். கடந்த 5-ம் தேதி போதை தலைக்கேறிய நிலையில் சீனியம்மாளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயல, அதைப் பார்த்த மகன் பாலமுருகன் தடுக்க முயன்றுள்ளார்.

ஆனால், “உன்னை விடமாட்டேன்” என குப்புசாமி மீண்டும் மிரட்டியதால் ஆத்திரமடைந்த சீனியம்மாள், கணவனை எட்டி உதைத்துக் கீழே தள்ளி, கயிற்றால் அவர் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.

பின்னர் போலீசுக்குத் தெரியாமல் இருக்க, உடலை கடற்கரையில் வீசிவிட்டு, மறுநாள் காலையில் அவர் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடி உடலைத் தகனமும் செய்துள்ளனர்.

ஆனால், செய்த பாவம் மனதை உறுத்தியதால், இரண்டு நாட்களுக்குப் பிறகு தாமாகவே முன்வந்து போலீசில் உண்மையை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர். தற்போது தாயும் மகனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.