பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக அன்புமணி ராமதாஸை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தச் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் தரப்பு ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் அருள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என்று முதலில் கூறிய தேர்தல் ஆணையம், பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அன்புமணிக்கு ஆதரவாகச் செயல்படுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், தேர்தல் ஆணையம் எதன் அடிப்படையில் தனது வாதத்தை மாற்றிக்கொண்டது என்பது தெரியவில்லை என்றும், ஒரு பொய்யான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் சாடினார்.

முறையான காலக்கெடுவைத் தாண்டி காலம் தாழ்த்தி மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் ஆணையம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

பல ஆண்டுகால உழைப்பில் ராமதாஸால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும், நீதிமன்றத்தை விலைக்கு வாங்க முடியாதவர்கள் தேர்தல் ஆணையத்தை வசப்படுத்தியிருப்பதாகவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.