விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் உடல் குறைபாடுகள் எவையும் ஒருவரின் வெற்றிக்குத் தடையாக இருக்காது என்பதை 24 வயதான தன்யா நாதன் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். கேரளா மாநிலத்தின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி சிவில் நீதிபதி என்ற வரலாற்றுச் சாதனையினை அவர் படைத்துள்ளார்.
மேலும் பிரெய்லி முறையில் சட்டப் படிப்பைப் பயின்று முடித்த தன்யா, தனது அயராத உழைப்பால் இன்று உயரிய நீதித்துறைப் பதவிக்குத் தேர்வாகியுள்ளார். இவரின் இந்த மகத்தான வெற்றி, சமூகத்தில் சவால்களை எதிர்கொள்ளும் பல இளைஞர்களுக்கு ஒரு பெரும் உத்வேகமாகவும், நம்பிக்கையாகவும் அமைந்துள்ளது.
தற்போது நீதிபதியாகத் தேர்வாகியுள்ள தன்யா நாதனுக்கு, விரைவில் பணி நியமன ஆணையும் வழங்கப்பட உள்ளது. தனது இலக்கை அடைய அவர் மேற்கொண்ட பயணம் சாதாரணமானதல்ல பலரின் பார்வையில் சாத்தியமற்றதாகத் தெரிந்த ஒன்றைத் தனது மன உறுதியால் அவர் சாத்தியமாக்கியுள்ளார்.
இந்நிலையில் “ஏறு முன்னேறு!” என்ற வாசகத்திற்கு இலக்கணமாகத் திகழும் இவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஒரு தனிமனிதராக அவர் அடைந்துள்ள இந்த வெற்றி, சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
