விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புதிய மின் இணைப்பு வழங்க விவசாயி ஒருவரிடம் 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பெண் அதிகாரி, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஹரிகிருஷ்ணன் என்பவர், தனது புதிய வீட்டிற்கு மின்சாரம் பெறுவதற்காக ரெட்டணையில் உள்ள மின் அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது அங்கிருந்த மின் வணிக ஆய்வாளர் ரேகா என்பவர், மின் இணைப்பு வழங்க 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹரிகிருஷ்ணன் இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார்.
மேலும் அவர்களின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரேகாவிடம் விவசாயி வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அரசுப் பணியில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கி கைதான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
