உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி கண்டறியப்பட்ட அந்தப் பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் வேறு எங்கோ கொலை செய்யப்பட்டு இங்கு வீசப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர்.

சடலத்தை அடையாளம் காண்பதில் பெரும் சவாலை எதிர்கொண்ட காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியை நாடினர். அந்தப் பெண்ணின் கையில் சன்னி என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்தது தவிர வேறு எந்த அடையாள அட்டைகளும் அங்குக் கிடைக்கவில்லை.

பல்வேறு காவல் நிலையங்களுக்குப் புகைப்படங்களை அனுப்பிப் பார்த்தும் எவ்விதத் தகவலும் கிடைக்காத நிலையில் காவல்துறையினர் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தீர்மானித்தனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் அந்தப் பெண்ணின் முகம் டிஜிட்டல் முறையில் மறுசீரமைக்கப்பட்டது. குறிப்பாக இறந்த நிலையில் இருந்த அந்தப் பெண்ணின் கண்கள் டிஜிட்டல் முறையில் திறக்கப்பட்டு உயிருடன் இருப்பது போன்ற தெளிவான தோற்றம் உருவாக்கப்பட்டது.

இந்த நவீனப் புகைப்படத்தின் உதவியால் அந்தப் பெண் மஹோபா பகுதியைச் சேர்ந்த 25 வயது சோனாலி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் சோனாலி யாருடன் வசித்து வந்தார் என்பதைக் கண்டறிந்தனர். இதில் சோனாலி தன்னுடன் வசித்து வந்த சன்னி என்பவரால் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த பெண்ணைக் கொலை செய்து சடலத்தை நெடுஞ்சாலையில் வீசிச் சென்றதாகக் கைதான சன்னி ஒப்புக்கொண்டார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 24 மணி நேரத்திற்குள் கொலையாளியைப் பிடித்துள்ள காவல்துறையினரின் இந்தச் செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.