நவி மும்பை வாசி பகுதியில் போலி மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் 21 வயது இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தோரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வார்டு உதவியாளராக பணியாற்றி வரும் சந்தேஷ் யஷ்வந்த் பாஷ்டே என்பவர், தன்னை ஒரு மருத்துவர் என பொய்க்கூறி வாசி செக்டார் 11 பகுதியைச் சேர்ந்த பிரசிதி பிகுராம் புவத் என்ற பெண்ணுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

மாதவிடாய் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணுக்கு ஹார்மோன் குறைபாடு இருப்பதாகக் கூறி, ஐந்து ஊசிகள் போடுவதற்கு 15 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டிற்கே சென்ற அவர், இரண்டு ஊசிகளைச் செலுத்தியுள்ளார்.

ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பெண் மயங்கி விழுந்து உடல்நிலை மோசமடைந்தது. இதனால் பதற்றமடைந்த அந்த வார்டு உதவியாளர், பயன்படுத்தப்பட்ட ஊசிகளை அப்புறப்படுத்துமாறு பெண்ணின் தந்தையிடம் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.

உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உறவினர்கள் பிடித்து விசாரித்தபோது, தான் மருத்துவர் அல்ல என்பதும், அந்தோரியில் வார்டு உதவியாளராக வேலை பார்ப்பதும் தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வாசி காவல்துறையினர் கொலைக் குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த போலி மருத்துவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.