2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான், தற்போது அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. பிப்ரவரி 15-ம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடும் என்று அந்நாட்டு அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, ஐசிசி நடத்திய பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் 5 முக்கிய நிபந்தனைகளை விதித்தது. குறிப்பாக, வங்கதேசத்திற்கு அபராதம் விதிக்கக்கூடாது, இந்தியா – பாகிஸ்தான் – வங்கதேசம் முத்தரப்புத் தொடர் வேண்டும், இந்தியாவுடன் இருதரப்புத் தொடர் நடத்த ஐசிசி அழுத்தம் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தது.
ஆனால், “இருதரப்புத் தொடர்களை நடத்துவது அந்தந்த நாடுகளின் விருப்பம், அதில் நாங்கள் தலையிட முடியாது” என்று கூறி ஐசிசி அனைத்து நிபந்தனைகளையும் அதிரடியாக நிராகரித்துவிட்டது. மேலும், “இன்னும் 24 மணி நேரத்திற்குள் உங்கள் இறுதி முடிவைச் சொல்லுங்கள், இல்லையென்றால் கடும் நிதி நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்று ஐசிசி கொடுத்த மிரட்டலுக்குப் பாகிஸ்தான் பணிந்துவிட்டது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆலோசனைக்குப் பிறகு, “நண்ப நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க விளையாடச் சம்மதிக்கிறோம்” என்று ஒரு மழுப்பலான காரணத்தைச் சொல்லி பாகிஸ்தான் தனது புறக்கணிப்பு முடிவைக் கைவிட்டுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் உலகின் மெகா மேட்ச் பிப்ரவரி 15-ம் தேதி உறுதியாகியுள்ளது.
