மலையாளத் திரையுலகின் ‘வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை’ ரங்காவாக ரசிகர்களைக் கட்டிப்போட்ட பகத் பாசிலின் ‘ஆவேசம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகி, ‘எடா மோனே’ (Eda Mone) என்ற ஒற்றை வசனத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதையும் அதிரவைத்த இப்படம், உலகளவில் 125 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது.
இந்நிலையில், ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பகத் பாசில், ஆவேசம் படத்தின் இரண்டாம் பாகம் 2027 அல்லது 2028-ம் ஆண்டில் கண்டிப்பாகத் தொடங்கும் என உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இயக்குநர் ஜித்து மாதவன், நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தை இயக்கி வருவதால், அந்தப் பணிகளை முடித்த கையோடு ‘ஆவேசம் 2’ பணிகளில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரங்கா மற்றும் அம்பன் கூட்டணியின் அலப்பறைகளை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
