சமூக வலைதளங்களில் வைரலாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘வாட்டர்லெமன் ஸ்டார்’ திவாகர், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிரடியான கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “சிவாஜி கணேசனுக்குப் பிறகு கமல்ஹாசன், அவருக்குப் பிறகு நான்தான் சிறந்த நடிகன்” என்று குறிப்பிட்ட அவர், தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தபடியாக தனக்குத்தான் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளம் இருப்பதாகக் கூறி அதிர வைத்தார்.

மதுரையிலிருந்து கேப்டன் விஜயகாந்துக்குப் பிறகு பெரிய அளவில் யாரும் வரவில்லை என்றும், அந்த இடத்தை நிரப்பவே தான் வந்திருப்பதாகவும் தெரிவித்த திவாகர், எதிர்காலத்தில் நடிகர் சங்கத் தலைவராவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தன்னை ஒரு ‘நடிப்பு அரக்கன்’ என வர்ணித்த அவர், விரைவில் வெள்ளித்திரையில் தனது விஸ்வரூபத்தைக் காணலாம் என்றும், தனக்கு அமையப்போகும் மனைவி திரிஷா அல்லது சமந்தா போல இருக்க வேண்டும் எனத் தனது ஆசையையும் வெளிப்படுத்தினார்.