தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா, திமுகவை வீழ்த்துவதே தங்களது ஒற்றை இலக்கு என்று தெரிவித்தார். இதற்காக அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு வலுவான களமாக இருப்பதாகவும், இதில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இணைய வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

விஜய்க்கு விழும் வாக்குகள் அனைத்தும் திமுகவிலிருந்து பிரியும் வாக்குகள் என்பதால், ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதே சமயம், தவெக-வில் விருப்ப மனுக்கள் வாங்குவதற்காகத் தொண்டர்கள் காட்டிய ஆர்வம் குறித்துக் கருத்து தெரிவித்த திலகபாமா, இது திரைத்துறையை நோக்கிய பயணத்தில் ஏற்படும் ‘ஆர்வக்கோளாறு’ மட்டுமே என்றும், இது ஒருபோதும் வாக்குகளாக மாறாது என்றும் சற்று காட்டமாகவே விமர்சித்துள்ளார்.

அதிமுக மற்றும் தவெக இடையே சமீபகாலமாகக் கடும் வார்த்தைப் போர்கள் நடந்து வரும் நிலையில், பாமக தரப்பிலிருந்து விஜய்க்கு இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பாமகவுக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ள பாமக பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.