சீனாவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் இணையத்தில் ஆபாச வீடியோக்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் தனது காதலியுடன் தான் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ அந்தத் தளத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். அந்த வீடியோ முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டது மட்டுமன்றி, அந்த இணையதளத்தில் கட்டணம் செலுத்திப் பார்க்கும் சந்தாதாரர்களுக்கு நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டு வந்துள்ளது.
தாங்கள் இருவரும் ஒருமுறை ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்தபோது, அங்கிருந்த மின்சுவிட்ச் போர்டில் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ‘ஸ்பை கேமரா’ மூலம் இந்தக் காட்சிகள் அவர்களுக்குத் தெரியாமலேயே படமாக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட இளைஞர் இது குறித்துக் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சீனா முழுவதும் ஒரு மிகப்பெரிய குற்ற கும்பல் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவது அம்பலமானது.
பல ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி, தம்பதிகளின் அந்தரங்கக் காட்சிகளைப் படம் பிடித்து, அவற்றைச் சிறப்புச் செயலிகள் மற்றும் இணையதளங்கள் வாயிலாகக் கள்ளச்சந்தையில் நேரலையாக விற்பனை செய்து வந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களுக்குத் தெரியாமலேயே இந்தப் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், சீனக் காவல்துறை இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரித்து வருகிறது.
