முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் தனித்துப் போட்டியிடுவார்கள் என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
தற்போது தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனையில் புதிய கட்சி தொடங்குவது குறித்து அவர் இறுதி முடிவு எடுத்துள்ளதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு முக்கிய திருப்பமாக, சசிகலா தனது புதிய கட்சியின் மூலம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. தென் மாவட்டங்களில் சசிகலாவிற்கு இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கி தங்களுக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் என்று விஜய் கருதுவதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, அமமுக நிர்வாகிகள் சிலர் சசிகலாவைச் சந்தித்து வருவதால் அதிருப்தியடைந்த டிடிவி தினகரன் அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கி வருகிறார். இந்த நகர்வுகள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
