விருதுநகரில் நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை ஆற்றினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ’40-க்கு 40′ என்ற இலக்கை எட்டியது போல், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ‘200 இடங்களுக்கு மேல்’ வெற்றி பெற்று 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
திமுக என்றால் பிரம்மாண்டம், உதயநிதி என்றால் அதையும் தாண்டிய பிரம்மாண்டம் என்று பாராட்டிய அவர், தேர்தல் வெற்றிக்கு உழைக்கத் தயாராக இருக்குமாறு தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
தமிழக அரசின் சாதனைகளான மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்றவற்றை மக்களிடம் பெருமையுடன் கொண்டு செல்லுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.
அதே நேரத்தில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் பூஜ்ஜியமே கிடைத்துள்ளதாக விமர்சித்த அவர், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிக்கப்படும் ஆபத்து இப்போதும் நீடிப்பதாகக் குறிப்பிட்டார்.
தமிழுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் திமுக கவசமாக நின்று காக்கும் என்பதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
மாநிலக் கட்சிகளை ஒழிக்க நினைக்கும் பாஜகவால், தமிழ்நாட்டை மட்டும் தொடக்கூட முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தார். மாநில உரிமைகளைப் பறித்து, அவற்றை நகராட்சிகளாக மாற்ற நினைக்கும் சக்திகளுக்குத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அவர் பேசினார்.
இந்த நம்பிக்கையான சூழலைப் பார்க்கும்போது தனது உற்சாகம் அதிகரிப்பதாகக் கூறிய அவர், இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் திமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
