ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தை சாதகமாக்கி, புனேவைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவரிடம் ரூ. 6.82 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், பிரபல ஆடை நிறுவனமான ‘பீபா’ பெயரில் செயல்பட்ட போலி இணையதளம் ஒன்றில் ரூ. 1,700 மதிப்பிலான சுடிதார் ஒன்றை ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் ஆர்டர் செய்துள்ளார்.
மேலும் ஆர்டர் செய்த சில நாட்களில் அவரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஒரு சிறிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே பார்சலைப் பெற முடியும் என்று கூறி, ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார். அதன் மூலம் அந்தப் பெண்ணின் வங்கித் தகவல்களைத் திருடிய கும்பல், அடுத்தடுத்து பல தவணைகளாக அவரது கணக்கிலிருந்து ரூ. 6.82 லட்சத்தை சுருட்டியுள்ளது.
இந்த மோசடி குறித்து புனே சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என்றும், அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் லிங்க் அல்லது செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
இது குறிப்பாக, ‘கேஷ் ஆன் டெலிவரி’ ஆர்டர்களுக்கு முன்பணமாகப் பணம் கேட்கும் எவ்வித அழைப்புகளையும் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.
