சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த காதலர்கள் இருவர், தங்களுக்குத் தெரியாமல் ரகசியக் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு விடுதியில் தங்கியிருந்த எரிக் என்ற இளைஞர், சில வாரங்களுக்குப் பிறகு இணையத்தில் ஆபாசக் காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அதில் நானும் தனது காதலி எமிலியும் இருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.

விடுதி அறையில் அவர்கள் நுழைந்தது முதல் தனிப்பட்ட தருணங்கள் வரை அனைத்தும் சுமார் ஒரு மணி நேரம் ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்டு, அவர்களின் அனுமதியின்றி ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் வகையில் இணையத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

இது தங்களுக்குப் பேரிடியாக இருந்ததாகவும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு விடுதிகளில் தங்கவே அச்சமாக இருப்பதாகவும் அவர்கள் பிபிசி ஊடகத்திடம் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். சீனாவில் ரகசியக் கேமராக்கள் மூலம் தனிநபர்களைப் படம்பிடித்து ஆபாசத் தளங்களில் விற்பனை செய்யும் சட்டவிரோதத் தொழில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இதனைத் தடுக்க அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய விதிகளைக் கொண்டு வந்தது. இதன் படி, விடுதி உரிமையாளர்கள் தங்கள் அறைகளில் ரகசியக் கேமராக்கள் உள்ளனவா என்பதைத் தவறாமல் ஆய்வு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இத்தகைய குற்றங்கள் தொடர்வதாகவும், சீனாவில் உள்ள விடுதி அறைகளில் சுமார் 180-க்கும் மேற்பட்ட ரகசியக் கேமராக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பிபிசி புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது.