தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாக வலம் வந்த நடிகர் பொன்னம்பலம், சமீபகாலமாகத் தனது உடல்நிலை மோசமடைந்ததற்கான பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான ரகசியங்களை நேர்காணல் ஒன்றில் உடைத்துள்ளார். தனது வளர்ச்சியில் பொறாமை கொண்ட அவரது சொந்த அண்ணனே, அவருக்குப் பல்வேறு இன்னல்களைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். திருமண விஷயத்தில் தொடங்கிய இந்த மோதல், வருமான வரித்துறையில் மாட்டிவிடுவது வரை சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் ஆள் வைத்துத் தனது வீட்டின் அருகே பள்ளம் தோண்டி சூனியம் வைத்ததுடன், ரசத்தில் ‘குதிரை முடியை’ பொடி செய்து கலந்து கொடுத்ததாகவும், இதனால் இரண்டு ஆண்டுகளாகத் தனக்குத் தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் நலிவடைந்ததாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பிறந்தநாள் அன்று அண்ணன் வற்புறுத்திக் கொடுத்த பீரில் ஏதோ கலக்கப்பட்டிருந்ததாகவும், அதைத் தெரியாமல் குடித்த தனது நண்பர் உயிரிழந்த நிலையில், தனக்குக் கிட்னி வரை பாதிப்பு ஏற்பட்டதாகவும் பொன்னம்பலம் கூறியுள்ளார். சாதாரண முடியே வயிற்றுக்குள் சென்றால் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், குதிரை முடி குடலில் ஒட்டிக்கொண்டு தனது திடமான உடலை உருமாற்றிவிட்டதாக அவர் உருக்கத்துடன் பேசியுள்ளார். தனது மனைவிக்கும் அண்ணனுக்கும் நடந்த சண்டையில், தன்னை ஒழித்துக்கட்ட அண்ணன் முயன்றதை அவரே ஒப்புக்கொண்டதாகவும் பொன்னம்பலம் அந்தப் பேட்டியில் தெரிவித்தது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
