தஞ்சாவூரில் நடைபெற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்தின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றும், தமிழ்நாடு என்ற வார்த்தையே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். நிர்மலா சீதாராமன் தன்னைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாரே தவிர, மாநில வளர்ச்சிக்கு அவர் எதையும் செய்யவில்லை என்று உதயநிதி சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் போன்ற திட்டங்களால் தமிழ்நாட்டை 11.19 சதவீத வளர்ச்சியுடன் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளது என்றார்.
ஆனால், இந்த வளர்ச்சியைப் பொறுக்க முடியாத பா.ஜ.க அரசு, நிதி உரிமையைப் பறிப்பதோடு, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வதாக அவர் வருத்தம் தெரிவித்தார். திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இணைந்த இந்தத் திருமண விழா ஒரு சிறப்பான நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை “பா.ஜ.க-வின் முரட்டு அடிமை” என்று விமர்சித்த உதயநிதி, பட்ஜெட்டை முழுமையாகப் படிக்கும் முன்பே அவர் வரவேற்றது ஆச்சரியமாக இருப்பதாகக் கூறினார்.
எத்தனை புதிய அல்லது பழைய அடிமைகள் வந்தாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராவது உறுதி என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். இந்த வெற்றிக்குத் தஞ்சாவூர் மாவட்டம் ஒரு தொடக்கமாக அமையும் என்றும், நிர்வாகிகள் இதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
