பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகியும், முதல்வர் பகவந்த் மானுக்கு மிக நெருக்கமானவருமான லக்கி ஓபராய் மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஜலந்தரில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே தனது ‘தார ‘ காரில் லக்கி ஓபராய் அமர்ந்திருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய மர்ம கும்பல் ஒன்று அவரை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியது. இதில் நிலை குலைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். முதல்வர் பகவந்த் மானின் வலதுகரமாகப் பார்க்கப்பட்ட ஒருவரே பகல் நேரத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து ஜலந்தர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல்வருக்கு நெருக்கமான நிர்வாகி என்பதால், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட பகையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுங்கட்சி நிர்வாகிக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படுகொலைச் சம்பவத்தால் ஜலந்தர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.