பாமகவை கூட்டணிக்குள் சேர்க்க திமுக காட்டிய ஆர்வம், திருமாவளவனின் கடும் எதிர்ப்பால் மொத்தமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாமகவினர், மாற்றுத் திட்டமாக ‘நாம் தமிழர்’ கட்சியுடன் சேர சீமானை அணுகியபோது அவர் முகத்தில் அடித்தாற்போல ‘நோ’ சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் திமுக, நாதக என இரு தரப்பிலும் கூட்டணி கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், பாமக தரப்பு கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், எடப்பாடி பழனிசாமி மூலம் அன்புமணியை சரிக்கட்ட ஒரு தரப்பு முயன்றாலும், அதற்கு ராமதாஸ் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். “யாருக்காகவும் தலைவணங்க வேண்டிய அவசியம் இல்லை, கௌரவம் முக்கியம்; தேவையென்றால் தனித்தே போட்டியிடலாம்” என ராமதாஸ் பிடிவாதம் காட்டி வருவது அன்புமணி தரப்பைத் திகைக்க வைத்துள்ளது. அதிமுக கூட்டணியை நம்புவதா அல்லது தனித்து களமிறங்குவதா என்ற குழப்பத்தில் தைலாபுரத் தோட்டம் தத்தளித்து வருகிறது.
