ஜெருசலேமில் 13 ஆண்டு கால நீண்ட அகழாய்வுப் பணிகளுக்குப் பிறகு, முதல் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்றுப் பாதை செப்டம்பர் 2025-ல் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
‘சிலோவாம் குளம்’ முதல் ‘டெம்பிள் மவுண்ட்’ அடிவாரம் வரை செல்லும் இந்தப் பழமையான சாலை, இரண்டாம் ஆலய காலத்தில் யூத பக்தர்கள் வழிபாட்டிற்காகப் பயன்படுத்திய முக்கிய வழியாகும்.
சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்தப் பாதையை மீட்டெடுத்தது ஒரு வரலாற்று மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதன் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகள், இது ஜெருசலேமின் வரலாற்றுத் தொடர்பைப் பறைசாற்றுவதாகப் பாராட்டியுள்ளனர்.
இந்த அகழாய்வின் போது பழங்கால நாணயங்கள், எடைக் கற்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் போன்ற பல முக்கியப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இந்தப் பாதை ஆன்மீகத்திற்கு மட்டுமின்றி, வணிகத்திற்கும் முக்கிய இடமாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
மேலும், தரையின் அடியில் கண்டறியப்பட்ட வடிகால் கால்வாய் மற்றும் ரோமப் படைவீரரின் வாள் போன்றவை, அன்றைய கால யூத கிளர்ச்சியாளர்களின் வரலாற்றை விளக்கும் சான்றுகளாக உள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் பைபிளில் கூறப்பட்டுள்ள வரலாற்றுச் செய்திகளுக்கு வலுவான ஆதாரங்களாக அமைந்திருப்பதாக ஆய்வாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
